ஊராட்சி சேவை மைய கட்டிடத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்


ஊராட்சி சேவை மைய கட்டிடத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி சேவை மைய கட்டிடத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி சேவை மைய கட்டிடத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சேதமடைந்த சாலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் இருந்து ஆச்சாள்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் ரெயில் நிலையம் அருகே ஓம் சக்தி நகர் மற்றும் தோப்பு தெரு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தார்ச்சாலை பிரிந்து செல்கிறது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த தார்ச்சாலை மேம்படுத்தப்பட்டு 10ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதன் பிறகு இந்த சாலையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த சாலை சேதமடைந்து உள்ளது.

இதனால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். அப்பகுதியில் இருந்து கொள்ளிடம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

சீரமைக்க நடவடிக்கை

ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியை சேர்ந்த சேவை மைய கட்டிடத்துக்கு செல்லும் பிரதான சாலையாகவும், ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கும் கட்டிடத்துக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இந்த சாலை இருந்து வருகிறது. ஆனால் ஊராட்சி அலுவலகத்துக்கும், சேவை மைய கட்டிடத்துக்கும் சென்றுவரும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இதனால் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்த சாலையை மேம்படுத்தக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story