சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்


சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 9 May 2023 2:30 AM IST (Updated: 9 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி-உடுமலை இடையே விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-உடுமலை இடையே விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

சாலை விபத்து

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி-உடுமலை நான்கு வழிச்சாலையில் மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, சோல பாளையம் ஆகிய ஊராட்சி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலை போதிய அகலம் இல்லாமலும், சாலையின் பக்கவாட்டின் இருபுறமும் இரும்பு தடுப்புகள், திட்டு போடப்பட்டு இருப்பதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர், சப்-கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் விபத்துகளை தடுக்க இரும்பு கம்பிகள் மற்றும் பக்கவாட்டு தடுப்பை அகற்ற வேண்டும். மேலும் ஆக்கிரப்புகளை அகற்றி சாலையை தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருகிறது. விபத்து ஏற்படுவதை தடுக்க கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எனவே, இனியும் தாமதப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு முக்கிய கவனம் செலுத்தி சாலையின் இருபுறமும் உள்ள இரும்பு தடுப்பை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும் ஆக்கிரப்புகளை அகற்றி சாலை நடுவில் மின்விளக்குகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story