சேறும், சகதியுமாக மாறிய சாலை
அருப்புக்கோட்டை அருகே சேறும், சகதியுமாக மாறிய சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே சேறும், சகதியுமாக மாறிய சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தொடர்மழை
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன் தினம் பெய்த கனமழையால் அருப்புக்கோட்டை ஒன்றியம் பாளையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அக்கம்மாள் கோவில் பகுதியில் மழை நீர் தேங்கி சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் குடியிருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
அக்கம்மாள் கோவில் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.
சேறும், சகதியுமான சாலை
எங்கள் பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் சிறிய மழை பெய்தால் கூட சேறும், சகதியுமாக சாலை மாறி விடுகிறது. இதனால் இந்த சாலை வழியாக நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த சாலையை சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து சிறு, சிறு விபத்துகளில் சிக்குகின்றனர்.
சேறும், சகதியுமாக மாறிய சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆதலால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.