சாலையோர வியாபாரிகள் வாக்குவாதம் செய்து விரட்டியடித்தனர்


சாலையோர வியாபாரிகள் வாக்குவாதம் செய்து விரட்டியடித்தனர்
x

குறைந்த விலையில் பூ விற்றதால் சாலையோர வியாபாரிகள் வாக்குவாதம் செய்து விரட்டியடித்தனர்

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு தாலுகா விண்ணவாடி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் காஞ்சீபுரம் பகுதியில் வசிக்கும் தனது உறவினரிடம் பூக்களை கொள்முதல் செய்து செய்யாறு டவுன் நகராட்சி அலுவலகம் முன்பும், ஆரணி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகனத்தில் சென்று மாலை நேரங்களில் மல்லிகைபூ உள்ளிட்ட பூக்களை விற்று வந்தார்.

வழக்கம்போல் இன்று நகராட்சி அலுவலகம் முன்பாக சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வந்தார்.

இதனையறிந்த செய்யாறில் சாலை ஓரங்களில் விற்பனை செய்து வரும் பூ வியாபாரிகள் ஒன்று திரண்டு மணியிடம் வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வெளியூரில் இருந்து வந்து இங்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், பூ விற்பனையாளர்கள் அமைப்பில் உறுப்பினராக இல்லாத நீ செய்யாறு பகுதியில் விற்பனை செய்யக்கூடாது, நீ குறைந்த விலைக்கு பூ விற்பதால் எங்களுக்கு பூ விற்காமல் வருமானம் பாதிக்கிறது என வாக்குவாதம் செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு இன்ஸ்பெக்டர் பாலு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது வியாபாரிகளிடம் முறையாக புகார் மனுவினை போலீஸ் நிலையத்தில் அளிக்குமாறு அறிவுறுத்தி கூட்டத்தினை கலைத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story