'குல்லா' அணிந்து வந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்


குல்லா அணிந்து வந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்
x

சிவகாசியில் 4 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்த நிலையில் கொள்ளையர்கள் ‘குல்லா’ அணிந்து வந்து கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் 4 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்த நிலையில் கொள்ளையர்கள் 'குல்லா' அணிந்து வந்து கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது.

4 வீடுகளில் கொள்ளை

சிவகாசி சித்துராஜபுரத்தில் தேவி நகர் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பூட்டியிருந்த 4 வீடுகளின் பூட்டை உடைத்து அந்த வீடுகளில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பத்மநாபன் என்பவர் வீட்டில் 60 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ஆகியவை கொள்ளை அடிக்கபட்டதாக முதல் தகவல் பரவியது. இந்தநிலையில் வெளியூரில் இருந்து சிவகாசி திரும்பிய பத்மநாபன் தனது வீட்டில் 91 பவுன் தங்க நகைகளும், ரூ.1 லட்சமும், வைர நகைகளும் காணாமல் போனதாக போலீசில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கண்காணிப்பு கேமரா

தேவி நகரில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் 'குல்லா' மற்றும் கையுறை அணிந்து 2 பேர் நடமாடியது தெரியவந்தது.

இவர்கள் தான் 4 வீடுகளிலும் பூட்டை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். கொள்ளையர்கள் 'குல்லா' அணிந்து வந்ததால் அவர்களுடைய முகம் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாக வில்லை. இதனால் போலீசார் குற்றவாளிகள் யார் என கண்டறிவதில் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். கடந்த காலங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்களின் கைரேகைகள் கொள்ளை சம்பவம் நடைபெறும் பகுதிகளில் பதிவாகி இருக்கும் அதை போலீசார் ஆய்வு செய்து பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்து கொள்ளையர்களை அடையாளம் கண்டு வந்தனர். ஆனால் தேவி நகரில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஒரு வீட்டில் கூட கொள்ளையர்களின் கைரேகை பதிவாகவில்லை என கூறப்படுகிறது. இதுவும் விசாரணையை தாமதப்படுத்தப்படுத்துகிறது.


Next Story