மலையடிப்பட்டி பெருமாள் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் போலீசில் ஒப்படைப்பு


கீரனூர் அருகே மலையடிப்பட்டி பெருமாள் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை

மலையடிப்பட்டி பெருமாள் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ளது மலையடிப்பட்டி குகைக்கோவில். இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் உள்ளார். மேலும் இங்கு அபூர்வமான கலை சிற்பங்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த பக்தர்கள் நாள்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மர்ம ஆசாமிகள் 3 பேர் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் மூலஸ்தானத்தின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றுள்ளனர்.

போலீசில் ஒப்படைப்பு

கோவில் கதவுகள் உடைக்கப்பட்ட சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்று கூடி கோவில் உள்ளே புகுந்த கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் பொதுமக்கள் பிடியில் சிக்கிக் கொண்டனர். மற்றொரு ஆசாமி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டான். பிடிபட்ட 2 பேரையும் பொதுமக்கள் தர்ம அடிகொடுத்து உடையாளிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் ஒடுக்கூர் விஜயகுமார் (வயது 25), சேப்பலாம்தோப்பு நந்தகுமார் (24) என்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாக அலுவலர் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய மர்ம ஆசாமியையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இதையடுத்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த விஜயகுமார், நந்தகுமார் ஆகியோரை கீரனூர் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Next Story