பள்ளிகளில் சமூக நீதி ஏற்பட ஆசிரியர்கள் பங்கு அவசியம்
பள்ளிகளில் சமூகநீதி ஏற்படுவதற்கு ஆசிரியர்களின் பங்கு பெருமளவு அவசியம் என மாநில திட்ட குழு துணை தலைவர் கூறினார்.
சிவகங்கை
பள்ளிகளில் சமூகநீதி ஏற்படுவதற்கு ஆசிரியர்களின் பங்கு பெருமளவு அவசியம் என மாநில திட்ட குழு துணை தலைவர் கூறினார்.
தமிழ் கனவு நிகழ்ச்சி
சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர்ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பொருளியலாளரும், மாநில திட்டக்குழு துணை தலைவருமான ஜெயரஞ்சன் கலந்துகொண்டு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். சிறப்பாக கேள்விகள் எழுப்பிய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்தபின் ஜெயரஞ்சன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- காலை உணவு திட்டம் பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றும். இந்தியாவிலேயே தனிக்குடும்பம் அதிகமுள்ள மாநிலம் தமிழகம் தான். அவ்வாறு இருக்கும்போது வேலைக்கு செல்லும் பெண்களின் முன்னேற்றத்திற்கு இது உதவும்.
சமூக நீதி
இந்த திட்டம் செயல்படுத்தப்படும்போது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. நீட் தேர்வின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவ படிப்பிற்குள் வந்துள்ளார்கள் என்பதை விட எவ்வளவு பேர் வர முடியாமல் உள்ளனர் என்பதையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக சமுதாய பிரச்சினைக்கு தீர்வு காண நினைக்கும்போது தனி நபர்கள் ஜெயித்து வருவதை ஒப்பிட்டு காட்டி அதனை தடுக்க நினைக்க கூடாது.
பள்ளிகளில் சமூக நீதி பேணுவதற்கு ஆசிரியர்களின் பங்கே பெருமளவு அவசியம் இருக்க வேண்டும். முந்தைய காலத்தில் தமிழாசிரியர்கள் அதனை செய்தனர். இன்று அது கேள்விக்குறியாகியுள்ளது. உலகளவில் ஜி.டி.பி.யின் சராசரி 89 ஆயிரம் டாலர், இந்தியாவின் சராசரி 19 ஆயிரம் டாலர் இதிலேயே இந்தியாவின் பொருளாதாரம் வளர்கிறதா? என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் துரையரசன், சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.