வீடுகளின் மேற்கூரையை உடைத்து சிங்கவால் குரங்குகள் அட்டகாசம்
வால்பாறையில் வீடுகளின் மேற்கூரையை உடைத்து சிங்கவால் குரங்குகள் அட்டகாசம் செய்கிறது. மேலும் உணவு பொருட்களை சேதப்படுத்துவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
வால்பாறை
வால்பாறையில் வீடுகளின் மேற்கூரையை உடைத்து சிங்கவால் குரங்குகள் அட்டகாசம் செய்கிறது. மேலும் உணவு பொருட்களை சேதப்படுத்துவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சிங்கவால் குரங்குகள்
வால்பாறை வனப்பகுதியில் பல்வேறு வகையான வனவிலங்குகள், பறவைகள் வாழ்ந்து வருகின்றன. இதில் ஒருசில விலங்கினங்கள் மற்றும் பறவைகள் அழிந்து வரக்கூடியவை பட்டியலில் உள்ளன.
இந்த நிலையில் வால்பாறை பகுதியில் மானாம்பள்ளி, குரங்கு முடி, அக்காமலைபுல்மேடு, அய்யர்பாடி எஸ்டேட், புதுத்தோட்டம் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே வாழ்ந்து வரக்கூடிய அரிய வகை குரங்கினமான சிங்கவால் குரங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.
இதில் புதுத்தோட்டம் வனப்பகுதியிலும், அதன் எஸ்டேட் பகுதியிலும் வாழ்ந்து வரும் சிங்கவால் குரங்குகள் ரொட்டிக்கடை, பி.ஏ.பி. காலனி, காமராஜர் நகர் மற்றும் வால்பாறை நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளின் மேற்கூரையை உடைத்து அட்டகாசம் செய்கின்றன. மேலும் கதவு மற்றும் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து உணவு பொருட்களை சேதப்படுத்துகின்றன. இது தவிர மின் சாதன பொருட்களையும் உடைத்து விடுகின்றன. வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் கண்ணாடி, இருக்கைகளை சேதப்படுத்தி விடுகின்றன.
பாத்திரங்களை சேதப்படுத்தியது
இந்த நிலையில் இன்று காலையில் ரொட்டிக்கடை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த சிங்கவால் குரங்குகள் கூட்டம், கட்டிட தொழிலாளி சுரேஷ்குமார் என்பவரது வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்து சமையல் அறையில் இருந்த உணவு பொருட்களை எடுத்து தின்றதோடு பாத்திரங்களை உடைத்து, உணவு சமைப்பதற்கு வைத்திருந்த அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றது.
நடவடிக்கை
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால் வால்பாறை நகர் பகுதி மக்களும், எஸ்டேட் பகுதி மக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த குரங்குகளை கண்காணிப்பதற்காக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் பணியாளர்களை நியமித்து கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் அவர்களின் கண்காணிப்பையும் மீறி குரங்குகள் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே குடியிருப்பு பகுதிகளுக்குள் குரங்குகள் நுழைவதை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.