கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது


கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது
x
தினத்தந்தி 30 Dec 2022 6:45 PM GMT (Updated: 30 Dec 2022 6:47 PM GMT)

காரியாபட்டி அருகே 41 ஆண்டுகளுக்கு பிறகு அரசகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது

விருதுநகர்

காரியாபட்டி

காரியாபட்டி அருகே 41 ஆண்டுகளுக்கு பிறகு அரசகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

தண்ணீர் திறக்க ஏற்பாடு

காரியாட்டி அருகே நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருந்தது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. காரியாபட்டி பகுதியான ஆவியூர், அரசகுளம், குரண்டி, மாங்குளம், கம்பிக்குடி, பாப்பணம், அல்லாளப்பேரி மற்றும் பல்வேறு கிராமத்தில் நெல், வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை பல ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இந்த பகுதி மக்கள் நிலையூர்- கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதன் அடிப்படையில் அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொண்டு சென்று நிலையூர்-கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நிரம்பியது

இதுகுறித்து காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அரசகுளம் ஒன்றிய கவுன்சிலர் சேகர் கூறியதாவது:-

காரியாபட்டி மேற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பர பாரதி, சேகர், முன்கள பணியாளர்கள் சுப்பிரமணியன், சிலம்பரசன், காராளம், சக்கையா, மாரியப்பன், கலைஞானம், லிங்கம், க.சக்கையா, ராமு, பரமசிவம், கருப்பையா, சந்திரன், ராேஜஷ், கணேசன், கனிபாண்டி மற்றும் விவசாயிகள் பலரின் முயற்சியால் ஆக்கிரமிப்பு அகற்றிய பின்பு கடந்த ஆண்டு தண்ணீர் வந்து இந்த பகுதி கண்மாய்கள் ஓரளவு நிரம்பியது. தற்போதும் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டு மாங்குளம், அரசகுளம், குரண்டி, ஆவியூர், கம்பிக்குடி ஆகிய கண்மாய்கள் நிரம்பியுள்ளது. தற்போது கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

அரசகுளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் 1981-ம் ஆண்டு கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அதன் பின்பு இந்த கண்மாயில் தண்ணீர் நிரம்பவில்லை. தற்போது வைகை அணையில் இருந்து நிலையூர் கம்பிக்குடி கால்வாய் மூலம் தண்ணீர் வந்ததன் அடிப்படையில் அரசகுளம் கண்மாய் நிரம்பி 41 ஆண்டுகளுக்கு பின்பு மறுகால் பாய்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதை கொண்டாடும் விதமாக அரசகுளம் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story