ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது.
இடைத்தேர்தல்
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் 35 வார்டுகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அப்போது 19-வது வார்டில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விண்ணப்பித்திருந்த அன்னதாட்சி என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் அந்த வார்டில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
வாக்குப்பதிவு
இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நேற்று நடந்தது.அதன்படி மயிலாடுதுறை நகராட்சி 19-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. டபீர் தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது.
வாக்குச்சாவடியை மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் பார்வையிட்டனர். இந்த வார்டில் மொத்த உள்ள வாக்காளர்கள் 1,822 பேரில் மொத்தம் 1,255 பேர் வாக்களித்தனர்.
அமைதியாக நடந்தது
இதேபோல கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய 16-வது வார்டு ஒன்றியகுழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை ஒன்றியம் மூவலூர் ஊராட்சி, குத்தாலம் ஒன்றியம் பெருஞ்சேரி ஊராட்சி, செம்பனார்கோவில் ஒன்றியம் கீழப்பெரும்பள்ளம், கஞ்சாநகரம் மற்றும் காட்டுச்சேரி ஊராட்சிகள், கொள்ளிடம் ஒன்றியம் புத்தூர் ஆகிய ஊராட்சிகளிலும் வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது.
இந்த தேர்தலில்பதிவான வாக்குகள் வருகிற 12-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.