குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் அடித்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. அதிகமான சுற்றுலா பயணிகள் வந்ததால் போலீசார், அவர்களை நீண்ட வரிசையில் நிறுத்தி குளிக்க செய்தனர்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மழையில் நேற்று முன்தினம் இரவில் பெய்த மழையால் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
ஆப்பரிக்கும் தண்ணீர்
இந்த நிலையில் நேற்று காலை சுமார் 10 மணிக்கு மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஓரமாக நின்று குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதேபோல் ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் காலை 10.50 மணிக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தற்போதைய நிலையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து செல்கிறார்கள். சீசன் காலம் முடியும் தருவாயில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.






