பெட்டி கடைகளில் போதை பாக்கு விற்பனையை தடுக்க கலெக்டர் வளர்மதி உத்தரவு
அரக்கோணம் பகுதியில் ஸ்வீட் என்ற பெயரில் போதை பாக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதை தடுக்கவும் கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில், அரக்கோணம் வட்டம் ஓச்சலம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே நிலவும் பிரச்சினைகள் குறித்தும், கலவை வட்டம் பொன்னம்பலம் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தனியாருக்கு சொந்தமான இடத்தினை அரசுக்கு மாற்றி கொடுப்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் வேப்பூர் கிராமத்தில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இட பிரச்சினைகள் குறித்தும், காஞ்சனகிரி மலை கோவில் குறித்து இரண்டு ஊராட்சிகளுக்கு இடையே நிலவும் பிரச்சினைகள் குறித்தும், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தகவல் தெரிவிக்க வேண்டும்
அரசு மதுபானங்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் இடங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். சாராயம் விற்பனை, கள்ளச் சந்தையில் அரசு மதுபானங்கள் விற்பனை குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள் தகவல் தெரிவிக்க அனைத்து தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
நகரப்பகுதிகளில் வணிக கடைகள், முக்கிய கடைகளில் பொதுமக்கள் வாகனங்களை சாலைகளிலேயே நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவற்றை தடுத்திட சம்பந்தப்பட்ட கடைகள் வாடிக்கையாளர்களுக்கான வாகன நிற்கும் இடங்களை ஒதுக்கிட கடிதம் அனுப்ப வேண்டும். விபத்து அதிக அளவில் ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள சிப்காட் மற்றும் வி.சி. மோட்டூர் ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு மனித உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
போதை பாக்கு
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அரக்கோணம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள ஊர்களில் ஸ்வீட் என்ற பெயரில் போதை பாக்குகள் விற்கப்படுவதாகவும், பெரும்பாலான பெட்டி கடைகளில் ஹான்ஸ் போன்ற போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் இளம் சிறார்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சாலை விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடுபவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து உயிர்காப்பு செய்பவர்களுக்கு மாநில அளவிலான கண்காணிப்பு குழு பரிந்துரையின் பெயரில் 3 தகுதி வாய்ந்த நபர்களுக்கு தேசிய அளவில் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு பெறவும் பரிந்துரை செய்யப்படவுள்ளது. ஆகவே இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த நபர்களை கண்டறிந்து தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.