கரூர் மார்க்கெட்டில் மீன்களின் விற்பனை மந்தம்
புரட்டாசி மாதம் என்பதால் நேற்று கரூர் மீன்மார்க்கெட்டில் மீன்களின் விற்பனை மந்தமாக இருந்தது.
புரட்டாசி மாதம்
புரட்டாசி என்பது ஆன்மிகத்தோடு தொடர்புடைய மாதமாகும். இந்த புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இதனால் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள், திருவிழாக்கள், தேரோட்டம் போன்ற விழாக்கள் நடைபெறும். புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் விரதம் இருந்து, பெருமாள் கோவிலுக்கு சென்று வருவார்கள்.
அதனால் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல இந்த புரட்டாசி மாதம் வெயிலின் தாக்கம் குறைந்து, மழைக்காலம் ஆரம்பிக்கும் என்பதால் இறைச்சி, மீன் உணவுகளை தவிர்ப்பது வழக்கம்.
மீன்களின் விலை சரிவு
இந்நிலையில் கரூர் மீன்மார்க்கெட், இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமைகளில் அலைமோதும். இறைச்சி கடைகளில் மதியத்தை தாண்டியும் விற்பனை நடைபெறும். ஆனால் புரட்டாசி மாதம் என்பதால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று இறைச்சி கடைகளில் கூட்டம் குறைந்து இருந்தது, விற்பனையும் குறைவாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக கரூர் மீன்மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் குறைந்து, வெறிச்சோடி காணப்பட்டது.
இதனால் மீன்களின் விலையும் குறைந்துள்ளது. மீன்களின் விலை விவரம் வருமாறு:- ரூ.400-க்கு விற்பனையான ஒரு கிலோ சங்கரா மீன் தற்போது ரூ.300-க்கும், ரூ.1000-க்கு விற்பனையான ஒரு கிலோ வஞ்சரம் மீன் தற்போது ரூ.600-க்கும் (பெரியது) விற்பனையானது. மேலும் ஜிலேபி மீன் ரூ.150-க் கும், கெண்டை மீன் ரூ.160-க் கும் விற்பனையானது.
40 சதவீதம்
இதுகுறித்து விற்பனையாளர்களிடம் கேட்டபோது, மீன்களின் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்து உள்ளது என்றும், இந்த விலை வீழ்ச்சி இந்த புரட்டாசி மாதம் முழுவதும் இருக்கும். இன்னும் 10 நாட்களுக்கு பிறகு மீன்கள் விலை அதிகரிக்க கூடும் என தெரிவித்தனர்.