செருப்பு தைக்கும் தொழில் தேய்ந்து போனது
செருப்பு தைக்கும் தொழில் தேய்ந்து போனது. இதனால் தொழிலாளர்கள் எங்கே என்று தேடும் நிலை உருவாகி உள்ளது.
மனிதனின் கால் பாதங்களை பாதுகாக்கும் கேடயம் காலணி(செருப்பு). இன்றைய இன்டர்நெட் உலகத்தின் வளர்ச்சி செருப்புகளுக்கும் மட்டும் விதிவிலக்கல்ல. ஏனெனில் அன்று கடைக்கு தேடி சென்று வாங்கிய செருப்புகளை, வீட்டில் இருந்து கையடக்க செல்போன் மூலமே ஆர்டர் செய்து பெறுகிறோம்.
அதுவும், தாங்கள் அணியும் உடைக்கு ஏற்ப செருப்புகளை தேர்வு செய்யும் உலகத்துக்குள் சென்றுவிட்டோம். அதே போல், காலணிகளுக்கான ஒரு தனி அலமாரியை உருவாக்குவதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க, இந்த செருப்பை சார்ந்து இருந்த தொழிலாளர்களின் நிலை வேறு மாதிரியாக இருக்கிறது. முன்பை விட செருப்புகள் விற்பனை உயர்ந்து இருந்தாலும், அதை சார்ந்து பிய்ந்த செருப்புகளை தைப்பதற்காக இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வு என்னவோ சறுக்கலில் தான் உள்ளது.
கடந்த காலங்களில் ஒரு செருப்பு தேய்ந்து போகும் வரை போடுவார்கள். எத்தனை முறை அறுந்து போனாலும் அதை எப்படியாவது தைத்து போட்டுவிடலாம் என்று எண்ணி செருப்பு தைக்கும் தொழிலாளர்களை நாடி சென்றனர்.
இதனால் அவர்களது தேவையும் அதிகமாக இருந்தது. ஆனால், நிலைமை இன்று அப்படியாக இல்லை. இப்போது பிய்ந்த செருப்பை தூக்கி எரிந்துவிட்டு, தற்போது என்ன புது டிசைன் வந்துள்ளது என்று தேடி செல்லும் காலத்தில் இருக்கிறோம்.
மனிதனின் இந்த தேடல் தான், பிய்ந்த செருப்புகளை தைக்கும் தொழிலை மட்டுமே சார்ந்து இருக்கும் தொழிலாளர்களுக்கு வேலையே இல்லாமல் மாற்றிவிட்டது. எனவே அவர்களது வாழ்வும் செருப்புகளை போன்று தேய்ந்து போய்விட்டது.
நமது கால்களை பாதுகாக்கும் செருப்புகள் என்னவோ இந்த தொழிலாளர்களை காக்க தவறி விட்டது. ஏனெனில் மலிவு விலைகளில் தினம் தினம் புதுபுது வடிவில் வரும் செருப்பு மாடல்களும், அதை நோக்கிய மனிதர்களின் எண்ண ஓட்டங்களும் தான் காரணம் என்கிறார்கள் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்.
என்னுடன் இத்தொழில் போகட்டும்
இதுகுறித்து கடலூரில் செருப்பு தைக்கும் தொழிலாளி சுந்தரம் (48) கூறியதாவது:-
பரம்பரை பரம்பரையாக செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். நான் கடந்த 1995-ம் ஆண்டு முதல் செருப்பு தைத்து வருகிறேன். கடந்த காலங்களில் பலர் என்னிடம் செருப்பு தைக்க வருவார்கள். ஆனால் தற்போது செருப்பு தைக்க வருபவர்களை விட ஷூவுக்கு பாலீஷ் போடவும், அதனை தைக்க வருபவர்கள் தான் அதிகம் உள்ளனர். வயதான யாராவது தான் செருப்பு தைக்க வருகிறார்கள்.
பலர் செருப்புக்கு பணத்தை செலவு செய்வதா என்ற மனநிலையில் அவை பிய்ந்து போனாலும் தொடர்ந்து மக்கள் தைத்து பயன்படுத்தி வந்தார்கள். தற்போது பண்டிகை காலங்களில் புதிதாக வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவது போன்று, செருப்புகள் வாங்குவதையே பலர் சந்தோஷமாக பார்த்தனர்.
ஆனால் இன்றைக்கு நினைத்த நேரத்தில் புதிய செருப்பை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால் செருப்பு தைக்க யாராவது வரமாட்டார்களா? என்று எதிர்நோக்கி காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த தொழில் என்னுடன் போகட்டும் என்று எனது 3 மகன்களையும் கஷ்டப்பட்டு என்ஜினீயரிங் படிக்க வைத்தேன். எனவே எங்கள் காலத்துக்கு பின்னர் செருப்பு தைக்கும் தொழில் இருக்குமா? என்பது சந்தேகமே என்றார்.
வீட்டிலேயே பாலிஷ் போடும் மக்கள்
கள்ளக்குறிச்சியில் செருப்பு தைக்கும் தொழிலாளி தாமோதரன் (38) கூறுகையில், என்னை படிக்க வைக்க குடும்பத்தில் வசதி இல்லை. இதனால் நான் 8-ம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். எனது தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதால் தந்தையின் தொழிலை விடக்கூடாது என நான் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் நுழைவுவாயில் பகுதியில் திறந்தவெளியில் அமர்ந்து செருப்பு தைத்து வருகிறேன்.
கடந்த சில வருடங்களாக செருப்பு தைப்பதற்கு அதிகம் பேர் வருவதில்லை. முன்பெல்லாம் செருப்பு மற்றும் ஷூக்களில் பாலீஷ் போட வருவார்கள். ஆனால் தற்போது அனைவரும் வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டு பாலீஷ் போட்டுக் கொள்கின்றனர்.
அதேபோல் செருப்பு பிய்ந்து விட்டால் புதிதாக வாங்கிக் கொள்கின்றனர். இதனால் எங்கள் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டு, பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை. இதனால் வட்டிக்கு கடன் வாங்கி குடும்ப செலவை பார்த்து வருகிறோம்.
தினமும் வெயிலிலும், மழையிலும் நனைந்து கொண்டு செருப்பு தைத்து வருகிறோம். எனவே நகராட்சி சார்பில் செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு கடைகள் கட்டி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாட்கோ மூலம் வங்கியில் கடன் வாங்கி மெஷின் மற்றும் செட் அமைத்து செருப்பு தொழில் செய்யலாம் என விண்ணப்பித்து வங்கியில் கடன் கேட்டால் கடன் தர மறுக்கிறார்கள்.
எனவே செருப்பு தைக்கும் தொழிலை காப்பாற்றும் வகையில் தொழிலாளர்களுக்கு அரசு மூலம் உதவித்தொகை வழங்க வேண்டும். தொழில் செய்வதற்கு தாட்கோ மூலம் வங்கியில் கடன் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வயிற்று பசியை போக்குவதே சிரமமாக இருக்கிறது
விழுப்புரம் அருந்ததியர் தெருவை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி கணேசன்:-
நான் 25 ஆண்டுகளாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறேன்.
விழுப்புரம் நகரில் முன்பு 60 பேர் செருப்பு தைத்து வந்த நிலையில் தற்போது வெறும் 15 பேர் மட்டுமே உள்ளோம். செருப்பு தேய்வது போன்று நாளுக்கு நாள் செருப்பு தைக்கும் தொழிலும் தேய்ந்து வருகிறது. இதனால் இத்தொழிலை விட்டு பலர் கூலி வேலைக்கும், தூய்மை பணியாளர் வேலைக்கும் சென்றுவிட்டனர்.
தற்போது 100 ரூபாய் கிடைப்பதே அரிதாக உள்ளது. சில சமயங்களில் அதுவும் கிடைப்பதில்லை. தற்போதுள்ள விலைவாசி உயர்வில் இந்த வருவாயின் மூலம் வயிற்றுப்பசியை போக்குவது மிகவும் சிரமமாக இருக்கிறது. எங்களுடைய வாழ்வாதாரத்தை பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. எங்களுடைய வாழ்க்கையில் எப்போதுதான் ஒளி வீசும் என்று காத்திருக்கிறோம்.