அமாவாசை புனித நீராடலின்போது உள்வாங்கிய அக்னி தீர்த்த கடல்
வைகாசி மாத அமாவாசை புனித நீராடலின்போது, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் நேற்று திடீரென உள்வாங்கியது.
ராமேசுவரம்,
வைகாசி மாத அமாவாசை புனித நீராடலின்போது, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் நேற்று திடீரென உள்வாங்கியது.
வைகாசி அமாவாசை
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி, தை அமாவாசை நாட்கள், புரட்டாசி மகாளய அமாவாசை மற்றும மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதுபோன்ற அமாவாசை நாட்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்வார்கள். பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் தீர்த்தக்கிணறுகளிலும் நீராடி, சுவாமி-அம்பாளை தரிசிப்பார்கள்.
வைகாசி மாத அமாவாசை தினமான நேற்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
கடல் உள்வாங்கியது
இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக அக்னி தீர்த்த கடலின் ஒரு பகுதி நேற்று சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் கடல் நீருக்குள் இருந்த பாறைகள், பாசிகள் வெளியே தெரிந்தன. மற்றொரு பகுதியில் வழக்கம்போல் நீராடினர்.
கடல் உள்வாங்கிய பகுதியில் பக்தர்கள் நீராடுவதற்கு சிரமப்பட்டனர். சற்று தூரம் வரை நடந்து சென்று நீராடினர். கடல் உள்வாங்கி காணப்பட்டதை பலர் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். செல்போன்களில் படம் எடுத்துக்கொண்டனர்.
உள்வாங்கி காணப்பட்ட கடலானது நேற்று மாலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இது பற்றி மீனவர்கள் கூறும் போது, "இதுபோன்ற சீசனில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமானதுதான்" என தெரிவித்தனர்.