பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பாக்கு மரங்கள்
ஆனைமலை ஒன்றியதில் 23 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, தென்னை மரங்களுக்கு இடையில் விவசாயிகள் ஊடுபயிராக பாக்கு மரங்களை நடவு செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். மொகித்மங்களா, குட்டமங்களா என 2 ரக பாக்கு காய்கள் உள்ளன.
கடந்த நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பாக்கு காய்கள் அறுவடை பருவம் என்பதால், பாக்கு காய்கள் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் பாக்கு காய்களை உலர்த்தும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பச்சை காய் கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரையும், பாக்கு பழம் ரூ.65-க்கும் கேரளாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொள்முதல் மையம்
பாக்கு காய்களை உலர்த்தி காய வைத்து கொடுத்தால் ஒரு கிலோ ரூ.125 முதல் ரூ.175 வரை விற்பனை ஆகிறது. ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள உலர் கலங்களில் உலர்த்தி, விலை குறையும் சமயத்தில் விற்பனைக்கூடத்தில் நாளொன்றுக்கு ஒரு மூட்டைக்கு 10 பைசா செலுத்தி இருப்பு வைத்து விவசாயிகள் பயன் பெறலாம். இருப்பினும், வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பாக்கு மரத்தில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மகசூல் கிடைக்கும். இருப்பினும் அறுவடை சமயத்தில் இடைத்தரகர்கள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளிடம் குறைவான விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். கடந்த மாதத்தில் வெளி மாநிலங்களில் பச்சை பாக்கு காய்கள் கிலோ ரூ.80-க்கும், உலர்ந்த பாக்கு காய்கள் ரூ.200-க்கும் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், ஆனைமலை ஒன்றியத்தில் பச்சை பாக்கு காய்கள் ரூ.40-க்கும், உலர்ந்த பாக்கு காய்கள் ரூ.140-க்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அறுவடை சமயத்தில் நெல் கொள்முதல் மையம் தொடங்குவது போல், பாக்கு கொள்முதல் மையம் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.