ரம்புட்டான் பழங்களின் சீசன் தொடங்கியது
குமரி மாவட்டத்தில் ரம்புட்டான் பழங்களின் சீசன் தொடங்கியது. கிலோ ரூ.300-க்கு விற்பனையானது.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் ரம்புட்டான் பழங்களின் சீசன் தொடங்கியது. கிலோ ரூ.300-க்கு விற்பனையானது.
ரம்புட்டான் பழம்
குமரி மாவட்டத்தில் நிலவும் காலநிலை காரணமாக இங்கு பல்வேறு வகையான அபூர்வ பழங்கள் விளைகின்றன. குறிப்பாக ரம்புட்டான், மங்குஸ்தான், கோகோ, அத்தி, மட்டி, செம்மட்டி, அன்னாசி இங்கு விளைகின்றன. இதில் ரம்புட்டான் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சுவைக்கும் பழமாக உள்ளது.
மிருதுவான முட்களுடன், உருண்டை வடிவில் ரப்பர் பொம்மை போல் காணப்படும் இந்த பழத்தை விரல்களால் அழுத்தி உடைத்தால், உள்ளே வெள்ளை அல்லது இளம் சிவப்பு நிறத்துடன் நுங்கு போன்று வழுவழுப்பாக இருக்கும் சுளையை சுவைக்கலாம். சிறிது புளிப்புடன் அதிக இனிப்பாக இருக்கும்.
சீசன் தொடங்கியது
தரைமட்டத்தில் இருந்து சுமார் 20 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டவை ரம்புட்டான் மரங்கள். இந்த மரங்களில் ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான மாதங்கள் பழ சீசன் காலங்களாகும். சிவப்பு மற்றும் இளமஞ்சள் நிறங்களில் கொத்துக் கொத்தாக பழங்கள் காய்க்கின்றன. தற்போது மாவட்டத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் இந்த பழங்கள் பழக்கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன. இவை கிலோவிற்கு ரூ.300 வரை தற்போது விற்பனை செய்யப்படுகிறது. சீசன் தீவிரமடையும் போது இந்த விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உள்ளூர் பழங்களோடு, கேரளா உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள இப்பழங்கள் குமரி மாவட்டத்திற்கு விற்பனைக்கு வருகின்றன.
ரூ.2 லட்சம் வருமானம்
இதுகுறித்து பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் அ.ஜெயா ஜாஸ்மின் கூறுகையில்,
ரம்புட்டான் மரங்களின் தாவரவியல் பெயர் நெப்பீலியம் லெப்பாசியம் என்பதாகவும். இதன் தாயகம் தாயகம் மலேசியா ஆகும். இந்தியாவில் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இவை அதிக அளவில் விளைகின்றன. அதிக நார்ச்சத்து, மாவுச் சத்து, புரதம், வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் பகுதிகளில் ஊடுபயிராகவும், வீட்டுத் தோட்டங்களிலும் ரம்புட்டான் மரங்கள் காணப்படுகின்றன. விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் மாற்றுப் பயிராக இதனை நடவு செய்வதின் வாயிலாக ஏக்கருக்கு வருடத்திற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம் என்றார்.