கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
பட்டிவீரன்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக பணியை திடீரென நிறுத்தியதால், கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியில், சுமார் 500 ஆண்டுகள் பழமையான சோலைமலை அழகர் பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில், கடந்த 1985–-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு இதுவரை கும்பாபிஷேகம் நடத்தவில்லை. இதனால் கோவிலில் 16 கால் மண்டபம், மூலஸ்தானம், கோவில் சுற்றுச்சுவர் ஆகியவை சேதமடைந்து விட்டது.
இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில், சேவுகம்பட்டி சோலைமலை அழகர் பெருமாள் கோவிலும் ஒன்றாகும். இதனையடுத்து கோவில் கும்பாபிஷேக பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் ராமதிலகத்திடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து நேற்று கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜைகள் கோவிலில் நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மும்முரமாக செய்திருந்தனர். ஆனால், அரசு அனுமதி கிடைக்காததால் பாலாலய பூஜைகள் செய்யக்கூடாது என்று கோவில் செயல் அலுவலர் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், கோவில் முன்பு ஒன்று கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சிறிதுநேரம் கழித்து, அவர்கள் தாமாகவே கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பாலாலய பூஜையில் பங்கேற்க சென்னை, கோவை, பெங்களூருவில் இருந்து எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் வந்து விட்டனர். பூஜைக்கான பொருட்களையும் வாங்கி விட்டோம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறி நிறுத்தி விட்டனர் என்றனர்.