பரம்பிக்குளம் அணையில் மதகு சீரமைப்பு பணி வருகிற 20-ந்தேதிக்குள் நிறைவடையும்


பரம்பிக்குளம் அணையில் மதகு சீரமைப்பு பணி வருகிற 20-ந்தேதிக்குள் நிறைவடையும்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரம்பிக்குளம் அணையில் மதகு சீரமைப்பு பணி வருகிற 20-ந்தேதிக்குள் நிறைவடையும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பரம்பிக்குளம் அணையில் மதகு சீரமைப்பு பணி வருகிற 20-ந்தேதிக்குள் நிறைவடையும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

பரம்பிக்குளம் அணை

பி.ஏ.பி. திட்டத்தின் முக்கியமான அணையான பரம்பிக்குளம் 70 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் திருமூர்த்தி, ஆழியாறு பாசன நிலங்கள் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணை முழுகொள்ளளவை எட்டி இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி சங்கிலி அறுந்ததால் ஒரு மதகு சேதமடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

இதன் காரணமாக 5.8 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. இந்த நிலையில் சேதமடைந்த மதகிற்கு பதிலாக புதிதாக மதகு அமைக்க ரூ.7 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அணையில் மதகை பொருத்த போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 2 மதகுகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அமைச்சர் ஆய்வு

இந்த நிலையில் அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் புதிதாக மதகு பொருத்தும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், பரம்பிக்குளம் அணையில் மதகு பொருத்தும் பணி மற்றும் மற்ற மதகுகள் பராமரிப்பு பணிகள் 90 சதவீதம் முடிந்து உள்ளது. மதகு சீரமைப்பு பணிகள் வருகிற 20-ந்தேதிக்குள் நிறைவடையும். அதன்பிறகு பெய்யும் மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் தடுக்கப்படும். இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்ட பி.ஏ.பி. பாசன திட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றார்.

ஆய்வின் போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் நரேந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் தூணக்கடவு, பெருவாரிபள்ளம் ஆகிய அணைகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story