கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ளஏரிகளில் மதகுகளை சீர்செய்ய வேண்டும்கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்


கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ளஏரிகளில் மதகுகளை சீர்செய்ய வேண்டும்கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் மதகுகளை சீர்செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கரும்பு நிலுவை தொகை

செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய பங்கு தொகையை பெற்றுத் தர வேண்டும். கரும்பு வெட்டு கூலியை கட்டுப்படுத்த சர்க்கரை ஆலைகளுக்கு முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். மேலும் தரணி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும். புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களில் பனை விதைகள் நடுவதற்கு நடவடிக்கை எடுப்பது, மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மதகுகளை சீர்செய்வது, உளுந்தூர்பேட்டையில் துணை மின்நிலையம் அமைத்து தர வேண்டும். குன்னத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பது, வரஞ்சரம் முதல் கள்ளக்குறிச்சி வரை உழவர் சந்தைக்கு செல்வதற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்.

காப்பீட்டு தொகை

வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையை அரசே செலுத்த வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கறவை மாடுகள் கடன் வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினர். விசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் ஷ்ரவன் குமார், பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காட்டுப்பன்றிகளை விரட்ட மருந்து

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கிராமப்புறங்களில் உள்ள விவசாய விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு மற்றும் இதர பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்தது. எனவே கரும்பு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலமாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட காட்டுப்பன்றி விரட்டுவதற்கான மருந்தை 10 விவசாயிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் மானிய விலையில் வழங்கினார். இந்த மருந்துகளை விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள கோட்ட கரும்பு அலுவலகங்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி 1 கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் அரவிந்தன், கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை முருகேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் சசிகலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், கண்காணிப்பு பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story