இடைத்தரகரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாமல் இருக்கவே சிறப்பு குறைகேட்பு முகாம்
முதியோர் உதவித்தொகை போன்ற திட்டங்களுக்கு இடைத்தரகர்களிடம் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாறாமல் இருக்கவே சிறப்பு குறைகேட்பு முகாம் நடத்தப்படுகிறது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
காட்பாடி
முதியோர் உதவித்தொகை போன்ற திட்டங்களுக்கு இடைத்தரகர்களிடம் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாறாமல் இருக்கவே சிறப்பு குறைகேட்பு முகாம் நடத்தப்படுகிறது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சிறப்பு குறைகேட்பு முகாம்
வேலூர் புதிய பஸ் நிலையத்தை வருகிற 21-ந் தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதனை முன்னிட்டு காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு முதல் 15-வது வார்டுவரை மற்றும் 16-வது வார்டு, 31-வது வார்டு, பிரம்மபுரம், டி.கே.புரம், மெட்டுகுளம், சேனூர், வண்டறந்தாங்கல், கரசமங்கலம், வஞ்சூர், ஜாப்ராபேட்டை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கான சிறப்பு மக்கள் குறைகேட்பு முகாம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஏமாறாமல் இருக்க
பொதுமக்களுக்கு குறை இருக்கிறது. குறிப்பாக முதியோர் உதவித்தொகை பெற மூதாட்டிகளிடம் இடைத்தரகர்கள் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என வாங்குகின்றனர். இது போன்ற திட்டங்களுக்கு இடைத்தரகர்களிடம் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாறாமல் இருக்கவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர்கள் தலைமையில் இவ்வாறு சிறப்பு குறைகேட்பு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி இப்போது சிறப்பு குறைகேட்பு முகாம் நடக்கிறது. அதிகாரிகள் மனுக்கள் வாங்குவது பெரிதல்ல. அதற்கு சரியான தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் மனு கொடுத்தும் பலன் இல்லை என மக்கள் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அதற்காக வாங்கிய மனுக்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் என சொல்லமுடியாது.
நியாயமான மனுவாக இருந்தால் தீர்வு காணப்படும். நீர்நிலை புறம்போக்கில் சிலர் வீடுகளை கட்டி உள்ளனர். அவ்வாறு கட்டிய வீடுகளுக்கு பட்டா கொடுக்க கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதற்காக அவர்களை நாங்கள் கைவிட மாட்டோம். அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
சிறப்பு போனசாக
பொதுமக்களுக்கான சிறப்பு குறைகேட்பு முகாமில் வேலூர் மாவட்டத்தில் வாங்கப்படும் மனுக்களில் 100-க்கு 80 சதவீதம் தீர்வு காண வேண்டும். அப்போது தான் மக்களுக்கு அது பயன் தருவதாக இருக்கும். காட்பாடி தொகுதி அமைச்சர் தொகுதி என்பதால் கூடுதலாக 10 சதவீதம் போனசாக 90 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் வேலூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டல குழுத்தலைவர் புஷ்பலதா, பகுதி செயலாளர் வன்னியராஜா, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் சரவணன், பிரம்மபுரம் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.