பயிற்றுவித்த ஆசிரியர் காலில் விழுந்த சிறப்பு விருந்தினர்
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்றுவித்த ஆசிரியர் காலில் சிறப்பு விருந்தினர் விழுந்து ஆசி பெற்றார்.
செய்யாறு
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்த்துறையின் சார்பில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமைஆசிரியர் க.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வக்கீல் அசோக், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர் பிரபாகரன் கலந்து கொண்டு முத்தமிழும் மெய்ப்பாடும் தலைப்பின் கீழ் முகபாவனையோடு நடித்தும், பாடியும் ஆடியும் பேசினார்.
அதனைத்தொடர்ந்து செய்யாறு அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர் பூபாலன் கூத்துத்தமிழ் தலைப்பின் கீழ் தெருக்கூத்தின் சிறப்பை எடுத்துரைத்து, நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி மாணவர்களை நடனமாட செய்தார்.
நிகழ்ச்சியில் முதுகலைத் தமிழாசிரியர்கள் மோகன்தாஸ், பிரகாஷ், பட்டதாரி தமிழாசிரியர்கள் அரசு, ஆனந்தி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முதுகலை தமிழாசிரியர் கண்ணன் தொகுத்து வழங்கினார். முடிவில் மூத்த முதுகலை ஆசிரியர் குமரவேல் நன்றி கூறினார்.
முன்னதாக சிறப்பு விருந்தினர் பிரபாகரன் பள்ளியில் பணியாற்றும் வேதியியல் ஆசிரியர் ராஜசேகரிடம் படித்த மாணவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வகுப்பறை அனுபவங்களை நினைவு கூறி ஆசிரியர் காலில் விழுந்து ஆசி பெற்றார்.