மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்த காளைகள்


மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 19 May 2023 6:45 PM GMT (Updated: 19 May 2023 6:46 PM GMT)

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்துக்குட்பட்ட வடவன்பட்டி ஊராட்சியில் உள்ளது கொப்புடை அம்மன் முனிநாதர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வைகாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 8 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் வைகாசி திருவிழா தொடங்கியது. 8-ம் நாள் திருவிழாவான நேற்று முனிநாதர் சுவாமி வழிபாட்டிற்காக மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. கோவில் முன்பு வாடிவாசல் தொழு அமைக்கப்பட்டது.

சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டன. முன்னதாக கிராமத்தின் சார்பில் வடவன்பட்டி முனிநாதர் சுவாமி கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்து கோவில் காளை திறந்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

பல காளைகள் பிடிபடாமல் சென்றது. ஒரு சில காளைகள் மட்டும் பிடிபட்டன. பிடிப்பட்ட காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் கிராமத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இன்று பால்குடம், நாளை முளைப்பாரி திருவிழாவுடன் கொப்புடை அம்மன் முனிநாதர் வைகாசி மாத திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வடவன் பட்டி கிராமத்தார்கள் செய்திருந்தனர்.


Next Story