மாம்பழம் விற்ற பெண் குத்திக்கொலை


மாம்பழம் விற்ற பெண் குத்திக்கொலை
x
சேலம்

சேலம்:

சேலம் கோர்ட்டு அருகே குடும்பத்தகராறில் மாம்பழம் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை அவரது கணவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஆட்டோ டிரைவர்

சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் அருகே தேசிய புனரமைப்பு காலனியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 35). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (27). இவர்களுக்கு முகில் (6), கிரிஷ் (3) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வி, கணவரை விட்டு பிரிந்து வீராணம் அருகே பள்ளிப்பட்டியில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

மாம்பழ வியாபாரம்

இதனிடையே, சேலம் அஸ்தம்பட்டியில் ஏற்காடு மெயின்ரோட்டில் கோர்ட்டுக்கு அருகே தமிழ்ச்செல்வியும், அவரது அக்காள் அனுசுயாவும் சாலையோரம் கடை வைத்து மாம்பழங்களை வியாபாரம் செய்து வந்தனர். தினமும் அவர்கள் இருவரும் வீராணம் பள்ளிப்பட்டியில் இருந்து சேலம் வந்து மாம்பழம் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

அதேசமயம், சமீபத்தில் சேலத்தில் இருந்து மூர்த்தி தனது இளைய மகனை மட்டும் அழைத்து கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார். அங்கு தங்கி வேலை செய்து வந்துள்ளார். பின்னர் அவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மகனுடன் சேலத்துக்கு வந்தார்.

இது பற்றிய தகவல் அறிந்த தமிழ்ச்செல்வி, பொன்னம்மாபேட்டைக்கு சென்று கணவருடன் இருந்த மகன் கிரிசை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். மனைவியும் பிரிந்து சென்ற நிலையில் மகனையும் அழைத்து சென்றுவிட்டதால் மூர்த்தி கடும் கோபத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மனைவி கொலை

இந்தநிலையில், நேற்று காலை வழக்கம்போல் தமிழ்ச்செல்வி, அவரது அக்காள் அனுசுயா ஆகிய இருவரும் சேலம் கோர்ட்டு அருகில் உள்ள சாலையோர கடையில் மாம்பழம் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, மாலை 4 மணியளவில் கடைக்கு வந்த மூர்த்தி தனது மனைவியிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் ஆவேசம் அடைந்த மூர்த்தி தான் மறைத்து வைத்து எடுத்து வந்த கத்தியால் தமிழ்ச்செல்வியின் கழுத்து, நெஞ்சு, கை பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இதுபற்றி தகவல் அறிந்த அவரது தந்தை மணி, தாய் ராதா மற்றும் உறவினர்கள் அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் கொலையுண்ட தமிழ்ச்செல்வியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலத்தில் பட்டப்பகலில் குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசாரிடம் ஆட்டோ டிரைவர் மூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து மூர்த்தி மும்பைக்கு சென்றுவிட்டார். ஆனால் அவரது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக மூர்த்திக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நேற்று மதுபோதையில் வந்து மனைவி தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றனர்.


Next Story