நீட் விலக்கு மசோதாவில் மாநில கவர்னருக்கு அதிகாரமே கிடையாது


நீட் விலக்கு மசோதாவில் மாநில கவர்னருக்கு அதிகாரமே கிடையாது
x

நீட் விலக்கு மசோதாவில் மாநில கவர்னருக்கு அதிகாரமே கிடையாது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

புதுக்கோட்டை

ஆலோசனை கூட்டம்

அரிமளம் அருகே ராயவரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராம.சுப்புராம் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ராம.அர்ஜுனன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், கவர்னரை தாண்டி ஜனாதிபதி தான் நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்து போட வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும்.

நீட் விலக்கு மசோதா மாநில கவர்னரை தாண்டி போய்விட்டது. எனவே மாநில கவர்னருக்கு அதிகாரமே கிடையாது. தனக்கு இல்லாத அதிகாரத்தை தான் செயல்படுத்த மாட்டேன் என்று சொல்வதற்கு தமிழக கவர்னருக்கு என்ன பெருமை இருக்கு.

பா.ஜ.க. கால் ஊன்ற விடக்கூடாது

இதற்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து தரப்பினரையும் குழுவாக ஒன்றிணைத்து பூத் கமிட்டி அமைக்க வேண்டும். தி.மு.க.வும், காங்கிரசும் பூத் கமிட்டியில் இணைந்து செயல்பட்டால் வரும் தேர்தலில் நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் கட்சியில் ஆலங்குடி, திருமயம் தொகுதிகளில் நூற்றுக்கு நூறு பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மோடி வாய் திறக்கவில்லை. தென் மாவட்டங்களில் பா.ஜ.க. கால் ஊன்ற விடக்கூடாது. அதற்காக நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், நகர தலைவர் செல்லையா, ஒன்றிய கவுன்சிலர்கள் கணேஷ் பிரபு, மெய்யப்பன் பாக்கியலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரிமளம் முகமது இப்ராஹிம் நன்றி கூறினார்.

ஆலங்குடி

ஆலங்குடியில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து ெகாண்டு பேசினார். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர்பன்னீர்செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள், கிராம காங்கிரஸ் கமிட்டியாளர்கள், இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story