விண்ணப்பத்தின் நிலையை தகவல் மையங்களில் தெரிந்து கொள்ளலாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் உதவி மையங்களுக்கு சென்று தங்கள் விண்ணப்பங்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:-
உதவி மையங்கள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை கடந்த 15-ந் தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடர்பான தகவல்களை பெற கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையங்களில் கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பத்தில் எந்த விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை பொதுமக்கள் https://kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து குறுஞ்செய்தி வந்தவர்களும், வாராத பொதுமக்களும் உதவி மையங்களுக்கு சென்று தங்களின் ஆதார் எண், குடும்ப அட்டை எண் ஆகியவற்றை தெரிவித்து தங்களது விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.
இ-சேவை மையங்களில்...
இந்த திட்டத்தில் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக குறுஞ்செய்தி வரப்பெற்று 30 நாட்களுக்குள் தாங்கள் தகுதி வாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையத்தினை அணுகி மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அரசிடமிருந்து தங்களுக்கு குறுஞ்செய்தி ஏதும் வரவில்லை எனில் தங்களது செல்போன் இயக்கத்தினை சரிபார்க்கவும். தங்களது விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் பட்சத்திலும் குறுஞ்செய்தி உடனே வராது. ஏற்கனவே விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க அரசால் அறிவிக்கப்படும் தேதியிலிருந்து தங்களது விண்ணப்பத்தினை இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.