சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் இன்னும் நிரம்பாத குளங்கள்


சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் இன்னும் நிரம்பாத குளங்கள்
x

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் இன்னும் நிரம்பாத குளங்கள்

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

மேட்டூர் அணை திறந்து 50 நாட்களை கடந்தும் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் இன்னும் குளங்கள் நிரம்பாத நிலை உள்ளது. எனவே ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரக்கூடிய வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

முறைப்பாசனம்

ஆண்டுதோறும் பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்படும். இந்த நிலையில் இந்தாண்டு மே மாத இறுதியிலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அணையில் போதுமான தண்ணீர் இருந்தும் தற்போது 1 லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டும் இதுநாள் வரை கடைமடை பகுதிக்கு 5 நாட்கள் வீதம் முறை வைத்தே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதே நேரத்தில் கடைமடை பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய விளங்குளம், ஊமத்தநாடு, சோலைக்காடு, கொரட்டூர், நாடியம், பள்ளத்தூர் போன்ற பெரிய ஏரிகளை தவிர்த்து சுமார் 500-க்கு மேற்பட்ட சிறு, சிறு குளங்களும் உள்ளது.

நிரம்பாத குளங்கள்

இந்த சிறு குளங்கள் அனைத்தும் மேட்டூர் அணை தண்ணீரை கொண்டு நிரம்பக்கூடியது. மேட்டூர் அணை திறந்து 50 நாட்களை கடந்தும் இந்த குளங்கள் அனைத்தும் இன்னும் நிரம்பவில்லை.

இதற்கு காரணம், குளங்களுக்கு தண்ணீர் வரக்கூடிய வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் சீரமைக்காமல் தூர்ந்துபோய் வாய்க்கால் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது.

வாய்க்கால்களை சீரமைக்க கோரிக்கை

எனவே 100 நாள் வேலை திட்ட பணியிலாவது வரத்து வாய்க்கால்களை சீரமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போதுதான் முறைவைத்து வழங்கப்படும் தண்ணீர் மூலம் தண்ணீர் இல்லாமல் இருக்கும் குளங்களை நிரப்ப முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story