மழைநீர் வடிகால் இடிந்து விழுந்தது


மழைநீர் வடிகால் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 1 March 2023 6:45 PM GMT (Updated: 1 March 2023 6:45 PM GMT)

உளுந்தூர்பேட்டையில் அமைக்கப்பட்ட ஒரு வாரத்தில் மழைநீர் வடிகால் இடிந்து விழுந்தது

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் இந்த பணிகளில் பல இடங்களில் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே கால்வாயின் பக்கவாட்டு மற்றும் மேல்பகுதியில் போடப்பட்ட கான்கிரீட் இடிந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் உளுந்தூர்பேட்டை-விருத்தாச்சலம் சாலையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி முன்பு கால்வாயின் மேல் பகுதியில் போடப்பட்ட கான்கிரீட் இடிந்து விழுந்தது. நேற்று காலை மீண்டும் 2 இடங்களில் கான்கிரீட் இடிந்து அந்த பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டது. அமைக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் மழைநீர் வடிகால் இடிந்து விழுந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, கான்கிரீட் தளம் இடிந்த இடத்தில் உள்ள பள்ளத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story