ஓடை கரை உடைந்து கிராமத்துக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்


ஓடை கரை உடைந்து   கிராமத்துக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சியில் வெளுத்து வாங்கிய மழையால், ஓடை கரை உடைந்து கிராமத்துக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது.

கள்ளக்குறிச்சி

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயலால் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் புயல் கரையை கடந்த நிலையில், மாவட்டத்தில் பெரிதாக மழையின் தாக்கம் இல்லை.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மழை பெய்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் கனமழையாக கொட்டித்தீர்த்தது. விடாமல் வெளுத்து வாங்கிய மழை மாலை 4.30 மணிக்கு பின்னர் தான் குறைய தொடங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

7 ஆயிரம் கனஅடி வெளியேற்றம்

குறிப்பாக கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தா அணையின் நீர்பிடிப்பு பகுதியான கல்வராயன்மலை பகுதியிலும் மழை கொட்டித்தீர்த்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

அதாவது 36 அடி கொள்ளளவு கொண்ட அணையில், 34 அடி வரை நீர் இருப்பு இருந்தது. இந்த நிலையில் தொடர் மழையால் அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் வரத்து இருந்தது. இந்த நீர் அப்படியே மணிமுக்தாற்றில் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனால் மணிமுக்தாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்றொரு அணையான கோமுகிக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில், அந்த நீரும் அப்படியே கோமுகி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காட்டாற்று வெள்ளம்

கல்வராயன்மலையிலும் நீடித்த கன மழையின் காரணமாக, அங்குள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதோடு, கள்ளக்குறிச்சி அருகே பொன்பரப்பட்டு, செம்படாக்குறிச்சி, செல்லியம்பாளையம், வெங்கடாம்பேட்டை உள்பட பல்வேறு ஏரிகளுக்கு, காட்டாற்று வெள்ளத்துடன் தண்ணீர் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.

இதனால், புத்தந்தூர் வழியாக ஆலத்தூர் ஏரிக்கு செல்லும் ஓடையில் அதிப்படியான தண்ணீர் வரத்து இருந்ததால், ஓடையின் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

அங்கிருந்து ஆர்ப்பரித்து சென்ற வெள்ள நீர், புத்தந்தூர் கிழக்குத்தெரு மற்றும் காலனி பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிட்டது.

அதேபோல் அந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த 30 ஏக்கர் நெற்பயிரையும் மழை வெள்ளம் மூழ்கடித்தது.

மணல் மூட்டைகள்

ஓடை கரையின் உடைப்பு பற்றி அறிந்த ஆலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சந்திரன் பவலரசன், வருவாய் ஆய்வாளர் ருத்ரகுமார் மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விஜயகுமார், பாசன உதவியாளர் முருகன் ஆகியோர் விரைந்து சென்று பொக்லைன் மூலம் மணல் மூட்டைகளை கொண்டு, உடைப்பை சரிசெய்தனர்.

இதனால் மழை வெள்ளம் மெல்ல மெல்ல வடிய தொடங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஓடையை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஓடை மிகவும் குறுகியதாக மாறிவிட்டது. தற்போது அதிகப்படியான தண்ணீர் வந்ததால், கொள்ளளவு தாங்காமல் உடைப்பு ஏற்பட்டு விட்டது என்று தெரிவித்தனர்.

உபரிநீர் வெளியேறியது

இதனிடையே சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி ஏரி நிரம்பி உபரி நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து கொசப்பாடி மற்றும் பொய்க்குணம், ஜவுளிகுப்பம், கள்ளிப்பட்டு, செல்லம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் சுமார் 1500 ஏக்கர் மணிலா, நெற்பயிர் உள்ளிட்ட விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது.

மேலும் கொசப்பாடி கிராமத்திற்குள் புகுந்த வெள்ளநீர், அங்குள்ள வீடுகளை சூழ்ந்தது. இதனால் கிராமத்தில் இருந்த மக்கள் உடனடியாக அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது அங்கு 30-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி இருக்கிறார்கள்.

கலெக்டர் ஆய்வு

இது குறித்த தகவலின் பேரில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம், மழை நீரை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் அனந்தசயனன் உள்பட பலர் உடனிருந்தனர். இதேபோல், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டார். அப்போது ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், ஆவின் ஒன்றியக்குழு தலைவர் ஆறுமுகம், வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன், புஷ்பராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வகணேஷ், வருவாய் ஆய்வாளர் கல்யாணி, வேளாண்மை அலுவலர் ஆனந்தன், உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் மணிகண்டன், பெரியார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story