பெரம்பலூர் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


பெரம்பலூர் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x

பெரம்பலூர் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் அலைமோதியது.

பெரம்பலூர்

பட்டாசு-புத்தாடைகள் வாங்க...

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காகவும், இனிப்பு வகைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, சூப்பர் பஜார், பள்ளிவாசல் தெரு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அந்தப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஜவுளிக்கடைகளிலும் புது ஆடை வாங்குவதற்காக மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் படையெடுத்து வந்தனர்.

விலை அதிகம்

ஆனால் கடந்த ஆண்டைப்போல், இந்த ஆண்டும் துணிமணிகள் மற்றும் மற்ற பொருட்களின் விலை சற்று அதிகமாகவே காணப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலான சாலையில் திடீரென தற்காலிக இனிப்பு கடைகள், பட்டாசு கடைகள் வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக ஏராளமான தரைக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரிகள் ஆடைகளை கூவி, கூவி விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்கள் பேரம் பேசி ஆடைகளை வாங்கி சென்றனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்...

நேற்று மாலை நேரத்தில் மழை பெய்து கொண்டே இருந்தது. ஆனாலும் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குடைபிடித்தபடியே கடைவீதிகளுக்கு வந்து தீபாவளி பண்டிகையை கொண்டாட தேவையான பொருட்களை வாங்கி சென்றதை காணமுடிந்தது.

மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி குடை, ரெயின் கோட், ஸ்வெட்டர், ெஜர்கின் ஆகியவற்றின் விற்பனையும் சுடுபிடித்துள்ளது. மழையினால் தரைக்கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

போலீசார் கண்காணிப்பு

பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெருவில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் கூட்டத்தினால் சங்குப்பேட்டையில் இருந்து கடைவீதி வழியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனை வரை உள்ள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story