மாணவ சமுதாயம் சிந்தனை மாறாமல் பொறுப்புள்ளவர்களாக திகழ வேண்டும்


மாணவ சமுதாயம் சிந்தனை மாறாமல் பொறுப்புள்ளவர்களாக திகழ வேண்டும்
x

மாணவ சமுதாயம் சிந்தனை மாறாமல் பொறுப்புள்ளவர்களாக திகழ வேண்டும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கயல்விழி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் மோகன் பேசியதாவது:-

ஒவ்வொருவரும் தற்போது சினிமாவில் கதாநாயகன் குடிப்பதை பார்த்து நாமும் குடிப்போம் என்ற எண்ணத்தில் பலர் இந்த பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். சினிமாவில் மட்டுமே படம் முழுவதும் குடிக்கும் கதாநாயகன் படத்தின் முடிவில் நல்லவனாக மாறிவிடுவார். அது வெறும் சினிமா மட்டுமே. ஆனால் நாம் ஒருமுறை போதைப்பழக்கத்திற்கு ஆட்பட்டோம் என்றால் அப்பழக்கத்திலிருந்து விடுபடுவது என்பது நமக்கு இயலாத காரியமாகிவிடும். எனவே ஒருவர் நம்மை போதைப்பழக்கத்திற்கு வழிகாட்டுகிறவர்களாக இருந்தால் அவர்களின் சகவாசத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள்.

சிந்தனை மாறாமல்...

நாம் மற்றவர்களுக்கு சரியான வழிகாட்டுதலில் முன்னுதாரணமாக இருந்திட வேண்டுமே தவிர தவறான செயல்பாட்டினால் மோசமடைந்தவர்களின் பட்டியலில் நாம் முன்னுதாரணமாக இருந்துவிடக்கூடாது. பெற்றோர்கள் நம் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை மாணவர்கள் தகர்த்தெறியாமல் கல்வியில் கவனம் செலுத்தி சிறந்த மாணவர்களாக திகழ வேண்டும். மாணவ சமுதாயம் சிந்தனை மாறாமல் பொறுப்புள்ளவர்களாக திகழ வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுடன் ஒரு புரிதலை ஏற்படுத்தி அவர்களின் சிந்தனைகளை புரிந்துகொண்டு அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கலெக்டர் மோகன் தலைமையில் போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்த உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, மாவட்ட கல்வி அலுவலர்கள் திண்டிவனம் கிருஷ்ணன், விழுப்புரம் (பொறுப்பு) காளிதாஸ், செஞ்சி (பொறுப்பு) சுப்புராயன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார், பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story