ஊஞ்சல் ஆடியபோது தவறி விழுந்து மாணவன் படுகாயம்


ஊஞ்சல் ஆடியபோது தவறி விழுந்து மாணவன் படுகாயம்
x
தினத்தந்தி 13 Sep 2023 8:30 PM GMT (Updated: 13 Sep 2023 8:31 PM GMT)

பழனியில் உள்ள தனியார் பள்ளியில் ஊஞ்சல் ஆடியபோது தவறி விழுந்து மாணவன் படுகாயம் அடைந்தான். இதுதொடர்பாக வருவாய்த்துறை, கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல்

ஊஞ்சல் ஆடியபோது...

பழனி அருகே உள்ள ஆயக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன். விவசாயி. அவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 11). இவன், பழனி கோர்ட்டு அருகே உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 8-ந்தேதி வழக்கம்போல் சதீஷ்குமார் பள்ளிக்கு சென்றான். அன்று மாலையில் பள்ளி வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் சதீஷ்குமார் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராத விதமாக ஊஞ்சலில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் ஊஞ்சல் பலகை சதீஷ்குமாரின் தலையில் மோதியதாக தெரிகிறது. இதில் மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை

இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவனை மீட்டு பழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு மாணவன் சதீஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பழனி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்ததில் மாணவன் படுகாயம் அடைந்த சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே இதுபற்றி உரிய விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதிகாரிகள் விசாரணை

அதன்பேரில் பழனி ஆர்.டி.ஓ. சரவணன் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவனுடன் படிக்கும் சக மாணவர்கள், பள்ளி நிர்வாகத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, மாணவன் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பள்ளியில் விசாரணை மேற்கொண்டோம். இதுபற்றிய அறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்க உள்ளோம். அதன்பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Related Tags :
Next Story