புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுத்த பள்ளி மாணவ-மாணவிகள்
முதுகுளத்தூர் அருகே பள்ளி மாணவ-மாணவிகள் புதிய கட்டிடம் கட்ட நூதன முறையில் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே ஆதம்கொத்தக்குடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி கட்டிடம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வருவதனால் அவ்வப்போது மழை பெய்தால் மழைநீர் உள்ளே வருவதாகவும் இதனை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டி தரவும், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தரவும், பள்ளிக்கு செல்லும் வழியில் ஊருணி இருப்பதால் தடுப்பு சுவர் அமைத்து கொடுக்க வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் மனு கொடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களுடைய சிலேட்டில் புதிய கட்டிடம் வேண்டும், கழிப்பறை வேண்டும், தடுப்பு சுவர் வேண்டும் உள்ளிட்ட வாசகங்களை எழுதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.