மாணவர்களுக்கு மாலை அணிவித்து பறை இசைத்து உற்சாக வரவேற்பு
பொள்ளாச்சியில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாலை அணிவித்து பறை இசைத்து மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாலை அணிவித்து பறை இசைத்து மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தூய்மை பணி நடைபெற்றது. மேலும் பாடப்புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளிக்கு மாணவர்கள் வந்ததும், அவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிக்கு வந்ததால், அவர்கள் உற்சாகமாக காணப்பட்டனர்.
மாலை அணிவிப்பு
இதற்கிடையில் பெத்தநாயக்கனூரில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு தொடக்கப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்து பறை இசைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
மேலும் கைகளை தட்டி வரவேற்றனர். தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சுடைலைமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
தொப்பம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், ஆசிரியர் பயிற்றுனர் சுகன்யா, ஆசிரியர்கள் தேவி, மகாலட்சுமி, மனுவேல்ராஜன், உஷா மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மனோரஞ்சிதம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வாசிப்பு திறன் பயிற்சி
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியை தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள் ரோஜா பூ மற்றும் சாக்லேட் கொடுத்து வரவேற்றனர்.
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார். புதிதாக சேர்ந்த மாணவர்களை பழைய மாணவர்கள் கை தட்டி வரவேற்றனர்.
வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நுழைவு வாயிலில் வாழை மரங்கள், தோரணங்கள் அமைத்து மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறும்போது, பள்ளிகளில் முதல் ஒரு வாரத்திற்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்ச்சி வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நடனம், கதை, பாட்டு போன்றவை சொல்லி கொடுக்கப்படும். எழுத்துப்பயிற்சி, வாசிப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றனர்.