தப்பி ஓடிய வாலிபரை துரத்தி பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்
மோட்டார் சைக்கிளை திருடிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை துரத்தி பிடித்த சப்-இன்ஸ்பெக்டரை உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
உக்கடம்
மோட்டார் சைக்கிளை திருடிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை துரத்தி பிடித்த சப்-இன்ஸ்பெக்டரை உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
சப்-இன்ஸ்பெக்டர்
திண்டுக்கல்லில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அருண்குமார். தற்போது கோவையில் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு உக்கடம் பகுதியில் போலீசாருடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் வெவ்வேறு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் தடுத்து நிறுத்தி மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை காண்பிக்கும்படி கூறினார்.
அதற்கு மறுத்த வாலிபர்கள் திடீரென போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அந்த வாலிபர்களில் ஒருவர் நைசாக தப்பி ஓடி மாயமானர். இதனை பார்த்த மற்றொரு வாலிபரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரம்
இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார், அந்த வாலிபரை துரத்தி சென்றார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விடாமல் துரத்திச்சென்று அவரை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து விசாரித்தபோது, அது போத்தனூரை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும், அவரை தாக்கி பிடிபட்டவர் உள்பட 3 வாலிபர்கள் சேர்ந்து அவரது மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது.
கைது
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார், பிடிபட்ட வாலிபரை உக்கடம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர், காளப்பட்டியை சேர்ந்த ரத்திஷ் (வயது 20) என்பது தெரியவந்தது. மேலும் போத்தனூரில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடி வந்ததால், அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போத்தனூர் போலீசார் உக்கடம் வந்து அந்த வாலிபரை கைது செய்து அழைத்து சென்றனர்.
மோட்டார் சைக்கிளை திருடி வந்த வாலிபரை 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமாரை பொதுமக்கள், உயர் அதிகாரிகள் பாராட்டினர்.