சிறுவாணியில் இருந்து கோவைக்கு வழங்கும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது

சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கு வழங்கும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக கேரளா அரசு மீது அமைச்சர் நேரு குற்றம்சாட்டினார்.
சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கு வழங்கும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக கேரளா அரசு மீது அமைச்சர் நேரு குற்றம்சாட்டினார்.
குடிநீர் திட்டப்பணிகள்
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு சுமார் 23 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ரூ.779 கோடியில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டி பெருமாள் கோவில் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
கூடுதல் குடிநீர்
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து குழாய் மூலம் கோவைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் தண்டிபெருமாள் கோவில் அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளதால் 3-வது குடிநீர் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க கடந்த 2021-ம் ஆண்டு ரூ.61 கோடியே 35 லட்சத்தில், 900 மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டு வருகிறது. அதன்படி கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி 60 சதவீதம் முடிவடைந்து உள்ளது. இதர பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அமைச்சர் நேரு ஆய்வு
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மேட்டுப்பாளையத்தில் நடந்துவரும் பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கட்டாஞ்சி மலை சுரங்கப்பாதை, மற்றும் நீரேற்று நிலையங்களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கேரளா குறைத்து வழங்குகிறது
கோவை மாவட்ட குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்தேன். பில்லூர் 3-வது குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கேரள அரசு சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கு 98 எம்.எல்.டி. தண்ணீர் வழங்குவதற்கு பதில், குறைத்து 39 எம்.எல்.டி. தண்ணீரை மட்டுமே வழங்கி வருகிறது. அதனால் நகரில் சில பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அதை சரிசெய்து அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும். பில்லூர் குடிநீர் திட்ட பணிகள் நிறைவு பெற்றால் 178 எம்.எல்.டி தண்ணீரும் கூடுதலாக கிடைக்கும். இனி கோவையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. பில்லூர் அணையின் சேற்றை தூர்வார துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பில்லூர் குடிநீர் திட்ட பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு
இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாக ஆணையாளர் பொன்னையா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றி செல்வன், துணை ஆணையாளர் ஷர்மிளா, முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் நேரு கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும், பொதுமக்களுக்கு சீராகவும், தடையின்றியும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.