தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது


தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது
x

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் தமிழக சட்டசபை அடுத்த மாதம் மத்தியில் கூடுகிறது.

சென்னை,

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்பட்டன. அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ந் தேதி நிறைவடைந்து, சட்டசபை நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

சட்டசபை 6 மாத கால இடைவெளிக்குள் கூட்டப்பட வேண்டும். அதன்படி அடுத்த மாதம் (அக்டோபர்) 20-ந் தேதிக்குள் சட்டசபையை கூட்ட வேண்டியது கட்டாயமாகும். எனவே அக்டோபர் மாதத்தின் 2-வது அல்லது 3-வது வாரத்தில் சட்டசபையை கூட்டுவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'அக்டோபர் 12-ந் தேதிக்கு மேல் சட்டசபை மீண்டும் கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக' தெரிவித்தார். இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.

அரசியல் முக்கியத்துவம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத்தொடர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எனவே சட்டம் ஒழுங்கு, அரசு திட்டங்கள் ஆகியவற்றை பற்றிய குறைபாடுகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும். அவர்களுக்கு பதிலடி கொடுக்க அரசு தரப்பினரும் தயாராக இருப்பார்கள். எனவே இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

தேர்தல் காலகட்டங்களில் காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை எழுவது வாடிக்கையாக உள்ளது. எனவே காவிரி நீர் பிரச்சினை பற்றி இந்த கூட்டத்தொடரில் பரபரப்பாக விவாதிக்கப்படும். கவர்னர் ஆர்.என்.ரவி பல சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது பற்றி இந்த கூட்டத்தொடரில் எதிரொலிக்கும். மேலும் புதிய சட்ட மசோதாக்கள், அவசர சட்டங்கள், கூடுதல் செலவீனங்களுக்கான மசோதா போன்றவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும்.


Next Story