ரூ.350 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு


ரூ.350 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு
x

ரூ.350 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டில் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.350 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி

கோவை மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மெகா கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி கொடிசியா அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுசல்யா தேவி வரவேற்றார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவ-மாணவிகளுக்கு ஏதேனும் வங்கிகள் கல்விக்கடன் தர மறுத்தால் கோவை மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். தமிழகத்தில் கல்வியை மேம்படுத்த வேண்டும், அனைத்து நிலைகளிலும் தமிழகம் உயர்ந்த நிலையை அடைந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல ஆட்சியை வழங்கி வருகிறார்.

ரூ.350 கோடி இலக்கு

தற்போது 293 மாணவ-மாணவிகளுக்கு ரூ.44 கோடியில் கல்விக்கடன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு மாத காலத்துக்குள் ரூ.100 கோடி வரை கல்விக்கடன் வழங்க தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் கல்வி கடனை வழங்குவதற்கு ரூ.350 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் கல்விக்கடன் வழங்கிய மாவட்ட கோவை மாவட்டம் என்ற நிலையை அடைய வேண்டும். தமிழகத்தின் தலைநகர் சென்னையாக இருந்தாலும் தொழில் துறை, கல்வி, மருத்துவம் துறைகளின் தலைநகர் கோவை என்ற நிலையை அடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள், நிதிகளை வழங்கி வருகிறார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விண்ணப்பித்த அனைவருக்கும் கல்விக்கடன்

கோவை மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். 30 நாட்களில் ரூ.100 கோடி கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிகளவு மாணவ-மாணவிகளுக்கு அதிகளவு கல்விக்கடன் வழங்கிய மாவட்டமாக கோவை மாவட்டமாக திகழ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வங்கி மேலாளர்கள் சிபில் ஸ்கோர் பிரச்சினையால் கல்விக்கடன் வழங்காமல் இருக்க கூடாது. இதுதொடர்பாக கலெக்டர் தலைமையில் முன்னோடி வங்கி மேலாளர்களை அழைத்து பேசி விண்ணப்பித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கல்விக்கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் கடந்த காலங்களில் குளறுபடிகள், குறைகள் குறித்து அனைவருக்கும் தெரியும். அது தற்போது ஆய்வில் உள்ளது. முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றபிறகு கோவை மாவட்டத்தின் வளர்ச்சிகளில் தனி கவனம் எடுத்து வருகிறார். வ.உ.சி. மைதானத்தில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளார். குளங்களை பொறுத்தவரை பணிகள் செய்யும்போது குளத்தின் அளவை குறைத்து உள்ளார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். மாநகராட்சி ஆணையாளர், கலெக்டர் தலைமையில் சமூக ஆர்வலர்களை அழைத்து பேசி அவர்களின் கருத்துகளை கேட்டு பணிகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன், கொடிசியா தலைவர் ரமேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், முன்னாள் எம்.பி. நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முன்னோடி வங்கி சீனியர் மேலாளர் கணேசன் நன்றி கூறினார்.


Next Story