தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்
கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுற்றித் திரியும் தெருநாய்கள்
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக மாநகரின் பல்வேறு பகுதிகளில் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அவற்றை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேற்று காலை பார்வையிட்டு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-
கருத்தடை அறுவை சிகிச்சை
கோவை மாநகராட்சி பகுதியில் ஆதரவற்ற தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணி இன்று (நேற்று) தொடங்கி உள்ளது. இது வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
கோவை கிழக்கு, தெற்கு, மத்திய மண்டலங்களில் பிராணி மித்ரன் அமைப்பும், மேற்கு, வடக்கு மண்டலங்களில் ஹியூமன் அனிமல் சொசைட்டி அமைப்பும் தெருநாய்களை கட்டுப்படுத்தி வருகிறது.
அந்த அமைப்புகளுக்கு நாய் பிடிக்கும் வாகனம் வழங்கப்பட்டு உள்ளது.
சீரநாயக்கன்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் ஆகிய பகுதிக ளில் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தகவல் தெரிவிக்கலாம்
கோவை மாநகரில் சுற்றித் திரியும் தெருநாய்கள் தொடர்பாக 9944434706, 9366127215 ஆகிய செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரி விக்கலாம்.
இதுதவிர மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர் கள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமும் புகார் கொடுக்கலாம். தெருநாய்களை பிடிக்கும் பணிக்கு மாநகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பு போடுவதற்காக கோவை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.