மீண்டும் மஞ்சள் பை வழங்கும் பணி

கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் மீண்டும் மஞ்சள் பை வழங்கும் பணியை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்
கோவை
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவருடைய உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
அதற்கு மேயர் கல்பனா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் மீண்டும் மஞ்சள் பை வழங்கும் பணி நடந்தது.
இதில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு மஞ்சள் பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து இதை வலியுறுத்தி பிளாஸ்டிக் ஒழிப்பு வாகன விழிப்புணர்வையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட போத்தனூர் பாலம் முதல் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு வரை 2 கி.மீ. தூரம் நடந்த தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பேரணியும் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர் ஷர்மிளா, மண்டல தலைவர்கள் கதிர்வேல், மீனாலோகு, சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.