பொதுமக்கள், மாணவர்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்
மங்கைமடம் கடைவீதியில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீர்காழி:
மங்கைமடம் கடைவீதியில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்றியக்குழு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஆணையர்கள் இளங்கோவன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்துகுமார் வரவேற்றார். மன்ற பொருள்களை கணக்கர் சரவணன் படித்தார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் நடைபெற்ற உறுப்பினர்களின் விவாதம் பின்வருமாறு:-
பஞ்சு குமார் ( தி.மு.க.):- மணிக்கிராமம் ஊராட்சியில் சாலைக்காரர் தெரு, பள்ளி கூட தெரு ஆகிய தெருக்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது இதனை சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் பொது மக்களை திரட்டி போராட்டம் செய்யப்படும்.
டாஸ்மாக் கடை இடம் மாற்ற வேண்டும்
நடராஜன் (அ.தி.மு.க.):- 15-வது நிதி மானியக்குழு திட்டத்தின் கீழ் ஒன்றிய உறுப்பினர்களுக்கு கூடுதலாக வளர்ச்சி பணிகள் வழங்க வேண்டும். கூட்டத்திற்கு வராத நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மங்கைமடம் கடைவீதியில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். ஊராட்சியில் சேதம் அடைந்த நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். மயான சாலைகள், மயான கொட்டகைகள் புதிதாக அமைத்து தர வேண்டும் என்றார்.
விஜயகுமார் (அ.தி.மு.க):- புதுத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளப்பள்ளம் கிராமத்தில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்கப்படும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலைக்குச் செல்லாமல் குடிநீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
குடிநீர் இணைப்பு துண்டிப்பு
தென்னரசு (தி.மு.க.):- ரேஷன் கடைகள் வாரம் முழுவதும் பொருள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி :-
ஊராட்சிகளில் அனுமதியின்றி பலர் குடிநீர் இணைப்புகளை பெற்று குடிநீரை வீணாக்கி வருகின்றனர். இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது எனவே அனுமதி பெறாமல் இணைப்பு பெற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அங்கன்வாடி மையம்
நிலவழகி ( தி.மு.க.):- எனது பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் அமைத்து தர வேண்டும். கீழமூவர்கரை பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்றார்.
தலைவர்:- உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும். கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.