டீ மாஸ்டர் அடித்துக்கொலை
டீ மாஸ்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
சாப்பாடு பரிமாறியதில் தகராறு
திருச்சி புத்தூர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 40). இவர் திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 28-ந்தேதி தினேஷ்குமார் திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
அப்போது அங்கு ஏற்கனவே சாப்பிட வந்திருந்த ஒருவருக்கு சாப்பாடு பரிமாறாமல், தினேஷ்குமாருக்கு ஓட்டல் ஊழியர் சாப்பாடு பரிமாறியது தொடர்பாக, அந்த நபருக்கும், தினேஷ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஓட்டலுக்கு வெளியே வந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
கட்டையால் தாக்கினார்
அப்போது ஆத்திரம் அடைந்த அந்த நபர், அருகில் இருந்த கட்டையால் தினேஷ்குமாரை தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்த தினேஷ்குமார் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி விசாரணை நடத்தினார். விசாரணையில், தினேஷ்குமாரை தாக்கியவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த அழகேசன் என்ற குமார்(40) என்பது தெரியவந்தது.
கைது
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் அழகேசன் என்ற குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.