ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த ஆசிரியர் கைது
ஆரணி அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ஆரணியை அடுத்த களம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் அந்த பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார்.
அவரிடம் களம்பூர், கஸ்தம்பாடி, ஆரணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் ரூ.3 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம் என மாத சீட்டு கட்டி வந்துள்ளனர்.
சீட்டு முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அவர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஆண்டு களம்பூர் போலீஸ் நிலையத்திலும், திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்தனர். மேலும் திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் கடந்த நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சங்கர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் துணிக்கடை ஒன்றில் கேசியராக பணிபுரிந்து வந்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் புதுக்கோட்டைக்கு சென்று சங்கரை கைது செய்தனர்.