ஆசிரியர்களை பாராட்டி சீர் எடுத்து வந்து அசத்திய பொதுமக்கள்
மண்ணவேளாம்பட்டி அரசு பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இதையடுத்து ஆசிரியர்களை பாராட்டி சீர் எடுத்து வந்து பொதுமக்கள் அசத்தினர்.
100 சதவீதம் ேதர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மண்ணவேளாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களை மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
சீர் வரிசை எடுத்து வந்து அசத்தல்
இந்நிலையில், 100 சதவீதம் தேர்ச்சி பெற காரணமாக இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டும் விதமாக பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் மழைத்துளி அறக்கட்டளையினர் இணைந்து ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் விதமாக ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பழங்கள், புத்தகங்கள், பாராட்டு கேடயங்களை சீர்வரிசை போல ஊர்வலமாக கொண்டுவந்து ஆசிரியர்களிடம் வழங்கினர். இதனை பள்ளி தலைமை ஆசிரியர் இளஞ்சேகரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெற்று கொண்டனர்.