போலீசார் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை
போலீசார் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கல்லக்குடி:
தகராறு
கல்லக்குடியை அடுத்த மால்வாய் சாதுர்பாகத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் கோவிந்தராஜ்(வயது 23). இவர்களது வீட்டிற்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த மனோன்மணியம் வீட்டிற்கும் நிலம் சம்பந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 27-ந் தேதி இரு வீட்டை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி, கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து மனோன்மணியம் கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கல்லக்குடி போலீசார் ெதாலைபேசி மூலம் கோவிந்தராஜை தொடர்பு கொண்டு, போலீஸ் நிலையம் வருமாறு அழைத்தனர். இது குறித்து சின்னத்துரை மற்றும் குடும்பத்தினரிடம் கோவிந்தராஜ் கூறியுள்ளார். மேலும் அவர் சாப்பிட்டுவிட்டு, வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் தேடினர். அப்போது கோவிந்தராஜ், தனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு நான் பூச்சிமருந்து குடித்து விட்டேன் என்று கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
தற்கொலை
இதையடுத்து சின்னத்துரை உறவினர்களுடன் சேர்ந்து, கோவிந்தராஜை தீவிரமாக தேடினார். சற்று தொலைவில் உள்ள காட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து
*மதுரை கீரைத்துறையை சேர்ந்த கண்ணன்(வயது 42), மணி(26), மதன்குமார்(18) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். துவரங்குறிச்சியை அடுத்த யாகபுறம் ஒத்தக்கடை அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சாலையில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும், அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*திருச்சி சிந்தாமணி காந்தி நகரை சேர்த்தவர் செல்வத்தின் மகன் முரளி(30). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று சிந்தாமணி அண்ணாசிலை அருகே நின்றபோது, அங்கு வந்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி செல்வத்திடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து செல்வம் கோட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து, திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த விஜய் என்பவரை கைது செய்தார்.
நூலக ஊழியர் தற்கொலை
*நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு(59). இவர் திருச்சி சட்டக்கல்லூரியில் நூலக பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்த ராஜகுரு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*திருவானைக்காவல் கன்னிமார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (33). கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவருடைய உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், ஆற்றில் பிணமாக கிடந்தது தினேஷ்குமார் என்பதும், ஆற்றில் குளிக்க சென்றபோது அவர் இறந்து இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.