தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் சாவு
தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள நாஞ்சி வயல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 34). எலனாப்பட்டியை சேர்ந்தவர் நவீன் (22). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு புளியால் அருகே உள்ள பகையனி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு மோட்டார்சைக்கிளில் சென்றுவிட்டு கொடுங்காவயல் கிராமத்தில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியூர் அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் வளைவு பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயபால் பரிதாபமாக இறந்தார். நவீன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே தடுப்பு சுவரில்தான் மோதி ஏற்கனவே 2 விபத்துகள் நடந்துள்ளன. தற்போது 3-வதாகவும் விபத்து நடந்துள்ளதால் அந்த தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் உள்ள அந்த தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.