வீட்டில் வாலிபர் மர்ம சாவு
சிவகாசியில் வீட்டில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சிவகாசி,
சிவகாசி மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள வரதகோபால் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் சங்கர்பாண்டி (வயது 22). இவருக்கும் விருதுநகர் ஜி.என்.பட்டியை சேர்ந்த சிவலட்சுமி என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
சங்கர்பாண்டிக்கு குடிபழக்கம் இருந்ததால் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது காதல் மனைவி சிவலட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி சங்கரன்கோவிலில் நடைபெற்ற உறவினர் திருமணத்துக்கு சங்கர்பாண்டி, சிவலட்சுமி, தாய் பஞ்சவர்ணம் ஆகியோர் சென்று வந்துள்ளனர்.
வீட்டிற்கு வந்தவுடன் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட் டுள்ளது. தாய் பஞ்சவர்ணம் விலக்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மாலையில் பஞ்சவர்ணம் மதுரையில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துவிட்டார். அப்போது வீட்டில் சங்கர்பாண்டி, சிவலட்சுமி ஆகியோர் இருந்துள்ளனர். பின்னர் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் சிவலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த நாள் காலையில் 10 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த உறவினர் பெண் ஒருவர், சங்கர்பாண்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து மாரியம்மாள் என்பவர் போன் மூலம் பஞ்சவர்ணத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த பஞ்சவர்ணம் மகனின் உடலை பார்த்து கதறினார். இது குறித்து தகவல் அறிந்த மாரனேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கர்பாண்டி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.