மதுரையில் நலம் விசாரிக்க சென்ற பாட்டியை கொன்ற வாலிபர்
மதுரையில் நலம் விசாரிக்க சென்ற பாட்டியை கொன்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது .
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜன் மனைவி ராஜேஸ்வரி (வயது 70). இவருடைய பேரன் பீட்டர் டேனியல் (26). இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சையும் பெற்று வருகிறார். இவர் ஜீவாநகர் 2-வது தெருவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி, பேரனை பார்த்து நலம் விசாரிப்பதற்காக பாட்டி ராஜேஸ்வரி அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது பாட்டிக்கும், பேரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பீட்டர் டேனியல் வீட்டில் கிடந்த பாட்டிலை எடுத்து பாட்டி ராஜேஸ்வரியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த ராஜேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார், பீட்டர் டேனியல் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.