திருடிய 4 செல்போன்களை திரும்ப ஒப்படைக்க உரிமையாளரிடம் பேரம் பேசிய வாலிபர்
பண்ருட்டி அருகே திருடிய 4 செல்போன்களை திரும்ப ஒப்படைக்க உரிமையாளரிடம் வாலிபர் பேரம் பேசினார். அப்போது அவர், பணம் மட்டும் போதாது, நல்ல ஓட்டலில் சாப்பாடும் வாங்கி தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
பண்ருட்டி,
செல்போன்கள் திருட்டு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் மகன் ஏழைபெருமாள். இவர், கடந்த 18-ந்தேதி இரவு வீட்டில் தனது செல்போனையும், தந்தையின் செல்போனையும் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கினார்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது 2 செல்போன்களையும் காணவில்லை.
இதேபோல் மேலும் அதே கிராமத்தில் சிலரது செல்போன்களும் திருடு போயிருந்தது. இது தொடர்பாக பண்ருட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
பேரம் பேசிய வாலிபர்
இந்த நிலையில் பக்கத்து ஊரான ராசாப்பாளையத்தை சேர்ந்த சிவசங்கர் என்பவர் வீட்டில் இருந்த 4 செல்போன்களும் ஒரே நாள் இரவில் திருடு போனது. பின்னர் அந்த 4 செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் சிவசங்கர், அந்த 4 செல்போன் எண்களுக்கும் தொடர்ந்து பேச முயற்சி மேற்கொண்டு இருந்தார். இரவு 9 மணி அளவில் ஒரு செல்போன் எண் மட்டும் ரிங் ஆனது.
அதை எடுத்த மறுமுனையில் வாலிபரின் குரல் கேட்டது. உடனே சிவசங்கர், அந்த வாலிபரிடம் நைசாக பேசி, 4 செல்போன்களையும் தருமாறு கூறினார். அதற்கு அந்த வாலிபர் 4 செல்போன்களையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்று பேரம் பேசினார்.
நல்ல ஓட்டலில் சாப்பாடு வேண்டும்
அப்போது அந்த வாலிபர் பேசுகையில், நான் சொல்ல போவதை கவனமாக கேளுங்கள். நான் திருட்டு பையன் தான். இந்த 4 செல்போன்களும் உங்களுக்கு வேண்டுமானால், நீங்கள் எனக்கு பணம் தர வேண்டும். அதாவது 4 செல்போன்களுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரம் கொடுத்தால் போதும். இதே செல்போன்களை கடைக்கு சென்று புதிதாக வாங்கினால் எவ்வளவு செலவாகும் என்று நீங்களே யோசித்து பாருங்கள். நான் சொல்கிற மாதிரிதான் நீங்கள் செய்யனும்.
பணத்தை எடுத்துட்டு, நான் கூறும் இடத்திற்குத்தான் வர வேண்டு்ம். அவ்வாறு வரும் போது நல்ல ஓட்டலில் எனக்கு சாப்பாடு வாங்கி வரவேண்டும். அதுவும் விடிவதற்குள் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு வாருங்கள். ஏனெனில் விடிந்து விட்டால் என்னை உங்களால் தொடர்பு கொள்ள முடியாது. செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவேன். என்னை பிடிப்பதற்காக ஆட்களை கூட்டிக்கொண்டு வந்தாலோ, போலீசுக்கு தகவல் சொன்னாலோ உங்களுக்குத்தான் நஷ்டம். 4 செல்போன்களும் உங்களுக்கு கிடைக்காது என்று கூறினார்.
வாலிபர் கைது
அதற்கு சிவசங்கர், நல்ல ஓட்டலில் சாப்பாடு வாங்கிக்கொண்டு, பணத்துடன் வருகிறேன் என்றார். இதனிடையே செல்போன் திருடன் பேசியதை சிவசங்கர் தனது செல்போனில் ஆடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர் அவர், உடனடியாக பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்தவற்றை கூறினார்.
இதையடுத்து போலீசாரின் ஆலோசனைப்படி சிவசங்கர், செல்போன் திருடனுடன் பேசினார். அவர், கூறிய இடத்திற்கு சிவசங்கர் பணத்துடன் சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார், செல்போன் திருடனை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகன் அய்யனார்(35) என்பதும், ஏழைபெருமாள் மற்றும் சிவசங்கர் ஆகியோரது வீடுகளில் புகுந்து 6 செல்போன்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அய்யனாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆடியோ வைரலாகிறது
இதனிடையே சிவசங்கரிடம், செல்போன் திருடன் அய்யனார் செல்போன்களை திரும்ப ஒப்படைக்க பேரம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.