தங்கையை கத்தியால் குத்திய வாலிபர்
முதல் கணவரிடம் பேசியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தங்கையை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை திருத்தங்கல் போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகாசி,
முதல் கணவரிடம் பேசியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தங்கையை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை திருத்தங்கல் போலீசார் தேடி வருகிறார்கள்.
திருமணம்
திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்தவர் செல்வி (வயது 33). இவருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
2-வது கணவர்
பின்னர் செல்வி திருநெல்வேலியை சேர்ந்த சங்கர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சங்கர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
இதை தொடர்ந்து செல்வி திருநெல்வேலியில் இருந்து தனது குழந்தைகளுடன் திருத்தங்கல் கண்ணகி காலனியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார்.
முதல் கணவர்
இதற்கிடையில் செல்வியின் முதல் கணவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தனது மனைவியை பார்க்க திருத்தங்கல் வந்துள்ளார். இதற்கு செல்வியின் அண்ணன் பழனிச்சாமி (35) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து செல்வியின் கணவர் செந்தில்குமார் தஞ்சாவூர் திரும்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்விக்கு வீட்டுக்கு குடிபோதையில் வந்த பழனிச்சாமி, நான் சொல்லியும் கேட்காமல் செந்தில்குமாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று கூறி கத்தியால் குத்தி உள்ளார். இதில் செல்விக்கு ரத்தகாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பழனிச்சாமியை தேடி வருகிறார்கள்.